மாநில கிரிக்கெட் போட்டி: மதுரை அணி சாம்பியன் மார்ச் 11,2010,05:22 IST
மதுரை: மதுரையில் நடந்த மாநில சீனியர் பிரிவு கிரிக்கெட் போட்டியில், மதுரை அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், அமெரிக்கன் கல்லூரியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மதுரை, திண்டுக்கல் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 50 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது. சுதேஷ் 38, முத்து விவேகானந்தன் 64 ரன்கள் எடுத்தனர். மதுரை அணி வீரர் மணிகண்டன் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து, ஆட்டத்தை துவங்கிய மதுரை அணி 31.3 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்தது. சந்தோஷ் கோபி 43, முத்துபாண்டி 41, துரை தயாநிதி 41 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் அணி வீரர் பிரான்சிஸ் ரோக்கின் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். திண்டுக்கல் அணியை நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது. சங்கத் தலைவர் ஈசா யூசுப் பரிசு, செயலாளர் மோகன்ராஜ் ராஜதுரை பரிசு வழங்கினர். துணைத் தலைவர் தமிழ்ச்செல்வம்,உதவித் தலைவர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர்கள் காஜா முகைதீன், ராஜா, மகேஷ் கலந்து கொண்டனர்.
கோவை சிறையில் ஏ.டி.ஜி.பி., திடீர் ஆய்வு மார்ச் 11,2010,03:46 IST
கோவை: சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., ஷியாம் சுந்தர் நேற்று கோவை சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.நேற்று காலை அவர் கோவை வந்தார். பகல் 11.30 மணிக்கு சிறைக்கு திடீரென வந்தார். இவரை டி.ஐ.ஜி., கோவிந்தராஜன், கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். சிறை உணவுக்கூடம், கைதிகளுக்கு வழங்கப்படும் தொழிற்பயிற்சி மற் றும் தொழிற் கூடங்களை பார்வையிட்டார். பின் சிறை அதிகாரிகளிடம் பேசிய அவர், தீவிர விசாரணைக்குப் பிறகே, கைதிகளை பார்க்க வரும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பகல் 2.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.
உலக கோப்பை ஹாக்கி : இன்று அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 11,2010,03:33 IST
புதுடில்லி : உலக கோப்பை ஹாக்கி அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. டில்லியில் நடந்து வரும் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்று துவங்கும் அரையிறுதி ஆட்டங்களில் இதில் 'ஏ' பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.முதல் போட்டி மாலை 6.05 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஜெர்மனி- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2-வது அரை இறுதி போட்டியில் நெதர்லாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8.35 மணிக்கு நடைபெறுகிறது.
ஆப்கனுக்கான உதவியை குறைக்க இந்தியா பரிசீலனை மார்ச் 11,2010,03:03 IST
புதுடில்லி : பயங்கரவாதிகளுக்கு எதிரான போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு இந்தியா சாலை சீரமைப்பு பணிகள், மருத்துவ சேவைகள் ஆகியவற்றை அளித்து வருகிறது. அங்கு சமீப காலமாக இந்தியர்களை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கனுக்கு இந்திய தரப்பில் இருந்து அளிக்கப்பட்டு வரும் சேவையை குறைத்துக் கொள்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு உயர் மட்ட தகவல் தெரிவிக்கின்றது.
வேதாரண்யம் அருகே போலீசார் இடையே மோதல் மார்ச் 11,2010,02:52 IST
வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாராண்யம் அருகே கடலோர காவல்படை போலீசார் சுப்ரமணியன்,காசிநாதன் ஆகிய 2 பேர் பணியை ஒதுக்கீடு செய்வதில் தகறாறு ஏற்பட்டது. இதனால் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோனியாவுடன் மம்தா சந்திப்பு மார்ச் 11,2010,02:26 IST
புதுடில்லி :ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான ஓட்டெடுப்பில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்கவில்லை. தங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என, மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். இதனால், டில்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த காங்., தலைவர் சோனியா, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை மம்தா பானர்ஜி ஆதரித்து வந்தார். ஆனால், அவரது கட்சி எம்.பி.,க்கள் திடீரென ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது, வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு, மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, ஓட்டெடுப்பில் தங்கள் கட்சி ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அவரிடம் விவரித்ததாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி மற்றும் அக்கட்சியின் லோக்சபா தலைமைக் கொறடா சுதீப் பந்தோபாத்யாயா ஆகியோர் உடனிருந்தனர்.
மான் வேட்டையாடிய இருவருக்கு ஓராண்டு சிறை மார்ச் 11,2010,02:12 IST
சின்னமனூர் : மான்வேட்டையாடிய இருவருக்கு தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஹைவேவிஸ் மலைப்பகுதி மேல்மணலாரை சேர்ந்தவர்கள் ஜோதிபாசு(48), பாண்டி(31). எஸ்டேட் தொழிலாளிகளான இவர்கள், 2007 ல் மணலாறு காட்டுப்பகுதியில் 150 கிலோ எடைகொண்ட மிளா மானை வேட்டையாடினர். இதனை ஹைவேவிஸ் போலீசார் கண்டுபிடித்து, இருவரையும் கைது செய்தனர். மான் வேட்டையாடப்பட்டது குறித்து சின்னமனூர் வனச்சரகர் ராஜேந்திரன், வனக்காப்பாளர் தங்கமணி, ஆகியோர் தொடர்ந்த வழக்கு மூன்றாண்டுகளாக உத்தமபாளையம் குற்றவியல் கோர்ட்டில் நடந்துவந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், மான்வேட்டையாடிய இருவருக்கும் தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனையும்,இரண்டாயிரம் ருபாய் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.
மலையாளத்திற்கு முக்கியத்துவம் இல்லை : அச்சுதானந்தன் கவலை மார்ச் 11,2010,02:00 IST
திருவனந்தபுரம் : 'கேரளாவில் அரசு கோப்புகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மலையாள மொழி பயன்படுத்தப்படுகிறது' என, அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் கவலை தெரிவித்துள்ளார்.கேரள சட்டசபையில் முதல்வர் அச்சுதானந்தன் பேசியதாவது:கேரளாவில் மலையாளம் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டு 40 ஆண்டுகளாகின்றன. ஆனால், அரசு கோப்புகளில் மலையாள மொழி 50 சதவீதத்துக்கும் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கிறது.அரசின் பெரும்பாலான தகவல் தொடர்புகளில் ஆங்கிலத்துக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. கேரளாவில் மலையாள பல்கலையை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.இவ்வாறு அச்சுதானந்தன் கூறினார்.
'லேப்ராஸ்கோபி' அறுவை சிகிச்சை மாநிலத்தில் திண்டுக்கல் முதலிடம் :பயிற்சி மையமாகவும் அறிவிப்பு மார்ச் 11,2010,01:43 IST
திண்டுக்கல் : மாநிலத்தில் நவீன 'லேப்ராஸ்கோபி' அறுவை சிகிச்சையில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு 13 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 11 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஆபரேஷன் செய்யப்பட்டது.ஒட்டுமொத்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையில் திண்டுக்கல் மாவட்டம் ஆறாவது இடத்தில் உள்ளது.அதே நேரத்தில் லேப்ராஸ்கோபி முறை மூலம் 5,550 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் திண்டுக்கல் மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் லேப்ராஸ்கோபிக்கு பயிற்சி மையமாகவும் அரசு அறிவித்துள்ளதாக மருத்துவ இணை இயக்குனர் ஜெயபால் தெரிவித்தார்.
கல்குவாரி கான்டிராக்டர் வீட்டில்வருமான வரித்துறை திடீர் "ரெய்டு' மார்ச் 11,2010,00:46 IST
சேலம்: கல் குவாரி கான்ட்ராக்டர் ஒருவர், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் திடீர் ரெய்டு நடத்தினர்.சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரோடு, 'தாட்கோ' அலுவலக ரோட்டில் வசித்து வருபவர் அய்யாவு. கல் குவாரி காண்டிராக்ட் மற்றும் கிரஷர் மிஷன் வைத்துள்ளார். சீலநாயக்கன் பட்டி அழகு நகரில் கல்குவாரி காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வருகிறார்.அய்யாவு பூர்வீக கோவிலில் தவம் நிகழ்ச்சி இன்று நடந்தது. மூன்று கிடா மற்றும் கறி விருந்தை வீட்டில் இருந்தவர்கள் தயார் செய்து கொண்டிருந்தனர்.காலை 8.30 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் அய்யாவு வீட்டில் புகுந்தனர். இரண்டு கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், வீட்டில் இருந்த ஃபோன் இணைப்பை துண்டித்தனர். வீட்டுக்குள் உள்புறம் தாழிட்டு கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அய்யாவு செய்து வரும் கான்டிராக்ட் தொழில் மூலம் ஈட்டிய வருமானம் சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். 'வருமானத்துக்கு முறையான வரி செலுத்தி வந்துள்ளாரா' என, சோதனையிட்டனர்.அய்யாவு மற்றும் குடும்ப பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள், தங்க, வெள்ளி நகை, வங்கி 'பாஸ்' புத்தகம், சேமிப்பு பத்திரம் மற்றும் வரவு, செலவு கணக்கு ரசீதுகள் உள்ளிட்டன வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காலை முதல் மதியம் வரை வருமானவரித்துறை அதிகாரிகள் கான்டிராக்டர் அய்யாவு வீட்டில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றி தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெட்டுத் தீர்மானம் கொண்டு வர இ.கம்யூ., முடிவு : ஆதரிக்க பா.ஜ., முடிவு மார்ச் 11,2010,00:13 IST
புதுடில்லி : அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, லோக்சபாவில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வர, இந்திய கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.அக்கட்சியின் மூத்த தலைவர் குரு தாஸ் தாஸ் குப்தா டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஒருமித்த கருத்துடன் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், பல விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை தவிர்த்திருக்கலாம். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, லோக்சபாவில் வெட்டுத் தீர்மானத்தை கொண்டுவர இ.கம்யூ., முடிவு செய்துள்ளது.இவ்வாறு குரு தாஸ் தாஸ் குப்தா கூறினார்.இத்தீர்மானத்தை பா.ஜ.,வும் ஆதரிக்கப் போவதாக, லோக்சபா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கோபிநாத் முண்டே தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துவிட்டது. இதைக் கண்டித்து கொண்டு வரப்படும் வெட்டுத் தீர்மானத்தை பா.ஜ., முழுமையாக ஆதரிக்கிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன' என்றார்.
முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் சீடர் மனு மார்ச் 10,2010,23:28 IST
சென்னை : முன்ஜாமீன் கோரி, சாமியார் நித்யானந்தாவின் சீடர் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம் துமன்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:நான் ஓமியோபதி டாக்டராக உள்ளேன். விபத்து ஒன்றில் சிக்கி, படுத்த படுக்கையாகி விட்டேன். என்னால் நகர முடியவில்லை. எனது வியாபாரத்திலும் நஷ்டம் ஏற்பட்டது. நண்பரின் ஆலோசனைப்படி, சுவாமி நித்யானந்தாவை சந்தித்தேன். பின், பூரண குணம் அடைந்தேன். மீண்டும் வியாபாரத்தை துவங்கினேன்; நன்றாக நடக்கிறது. நித்யானந்தாவின் ஆசியால், யோகா வகுப்புகளை நடத்தி வருகிறேன். எனது பெயரையும் ஸ்ரீ நித்ய சரவணானந்தா என மாற்றிக் கொண்டேன். யோகா வகுப்புகள் நடத்துவதைத் தவிர, எனக்கு நித்யானந்தா உடன் நன்கு அறிமுகம் எதுவும் கிடையாது. அவரது சீடர் என்பதால், என்னை போலீசார் கைது செய்யக்கூடும். எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 12ம் தேதிக்கு நீதிபதி நாகமுத்து தள்ளிவைத்தார்.
பாலக்காடு சந்தனக்காவு அம்மன் கோவில் திருவிழா கோலாகலம் மார்ச் 10,2010,23:09 IST
பாலக்காடு : பாலக்காடு ரயில்வே காலனி அத்தாணிப்பரம்பு சந்தனக்காவு அம்மன் கோவில் திருவிழாவில், நேற்று 11 யானைகள் அணிவகுப்புடன் பஞ்ச வாத்தியங்கள் அதிர, அம்மன் திருவீதியுலா நடந்தது.காலை 7 மணிக்கு, கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பஞ்சாரி மேளத்துடன் காழ்ச்ச சீவேலி கோவில் வளாகத்தில் நடந்தது. மதியம் உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு 11 யானைகள் அணிவகுப்புடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க, கேரளாவின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் அம்மன், யானை மீது பவனி வந்தார். இரவு 9 மணிக்கு செண்டை மேளங்கள் முழங்க அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.
போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வீட்டில் உயர்வகை மது பறிமுதல் மார்ச் 10,2010,22:48 IST
மும்பை : மகாராஷ்டிர போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பாலி வீட்டில் ஏராளமான வெளிநாட்டு மதுவகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருப்பவர் எம்.எஸ்.பாலி. கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவருக்கு தடையில்லா சான்றிதழ் அளிப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக, கடந்த வாரம் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, இவரது 22 வங்கி கணக்குகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கி வைத்துள்ளனர். பாலி எட்டு வங்கி கணக்குகளில் 63 லட்ச ரூபாய் வைத்திருந்தார்.மும்பையின் தெற்குபகுதியில் உள்ள பாலியின் வீட்டில் சி.பி.ஐ., சோதனையிட்டதில் 35 உயர் ரக மதுவகை பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன.கடந்த 10 ஆண்டுகளில் பாலி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் அவர் முதலீடு செய்துள்ளாரா? என்பது குறித்தும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.போபால், பரிதாபாத், குர்கான், டில்லி, மும்பையில் உள்ள பாலிக்கு சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. இவரது வீட்டிலிருந்து எட்டு லேப்டாப்களும், 34 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள வெளிநாட்டு கரன்சிகளும், 38 லட்ச ரூபாய்க்கான பங்கு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரிக்கு திட்ட ஒதுக்கீடு ரூ.2500 கோடி மார்ச் 10,2010,22:28 IST
புதுச்சேரி : புதுச்சேரிக்கு திட்ட ஒதுக்கீடாக 2010- 2011ம் ஆண்டிற்கு 2,500 கோடி ரூபாயை திட்டக் கமிஷன் அனுமதித்துள்ளது.திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் புதுச்சேரிக்கான திட்ட ஒதுக்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நேற்று நடந் தது.மத்திய திட்டத் துறை அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 2010- 2011ம் நிதியாண்டுக்கு 2500 கோடி ரூபாயை திட்ட ஒதுக்கீடாக வழங்க திட்டக் குழு ஒப் புதல் அளித்தது. கடந் தாண்டு திட்ட ஒதுக்கீடு 2250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.திட்டக் குழுவில், அரசின் நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளை மட்டுமே முழுமையாக சென் றடைய வேண்டும் என்றும், புதுச்சேரி அரசு தங் களது சொந்த வருவாயை பெருக்க வழிவகுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.முதல்வர் வைத்திலிங்கம் 'கடந்தாண்டு தேர்தல் வந்து விட்டதால் அனுமதிக்கப்பட்ட கடனை பெற தாமதம் ஏற்பட்டது. இதனால் மேம்பாட்டு நடவடிக் கைகளிலும் தாமதம் உருவானது. இந்த ஆண்டு திட்ட ஒதுக் கீட்டை முழுமையாக பயன்படுத்துவோம்' என்றார்.
நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 62வது ஆண்டு மறுமலர்ச்சி மாநாடு மார்ச் 10,2010,21:57 IST
திருநெல்வேலி:நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 62வது ஆண்டு மறுமலர்ச்சி மாநாடு நடந்தது.நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நடந்த மாநாட்டிற்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.காதர்மைதீன் தலைமை வகித்தார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர், வேலூர் தொகுதி எம்.பி.,அப்துல்ரஹ்மான், மாநில மகளிர் அணி தலைவி பாத்திமா முஸப்பர், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீழக்கரை செய்யது அப்துல்காதருக்கு சிறந்த கல்வியாளர் விருது, முகம்மது ஷாபிக்கு சிறந்த சேவையாளர், அப்துல்ரஹ்மானுக்கு சிறந்த இலக்கியவாதி உள்ளிட்ட விருதுகளை மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என அளித்த பரிந்துரையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருமண கட்டாயப்பதிவு சட்ட விஷயத்தில் முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்பட கோரிக்கை வைக்கப்பட்டது. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் கோவை சிறையில்வாடும் கைதிகளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் கைதிகளை விடுவிக்கவேண்டும். நெல்லை பேட்டையில் 10 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கூட்டுறவு நூற்பாலையை திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் எம்.பி., சஸ்பெண்ட் மார்ச் 10,2010,21:53 IST
புதுடில்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதா சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானது என்று கருத்து கூறிய முன்னாள் எம்.பி., சாதுயாதவை காங்கிரஸ் கட்சியில் இருந்து செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சாதுயாதவ், தான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றார்.
போலி ஆவண மோசடி : பள்ளி தாளாளர் கைது மார்ச் 10,2010,21:49 IST
திண்டுக்கல் : பள்ளிக்கு அங்கீகாரம் பெற போலி ஆவணம் தயாரித்த தாளாளரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டை சேர்ந்தவர் சுப்புராமன்(60). இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்வேல் என்பவருக்கு கடந்த 30.3.2001ல் நர்சரி பள்ளி நடத்த தனது இடத்தை வாடகைக்கு விட்டிருந்தார்.பள்ளிக்கு அங்கீகாரம் பெற 15 ஆண்டுகள் இடத்திற்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று செந்தில்வேல்,சுப்புராமனிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு சுப்புராமன் சம்மதிக்கவில்லை. பள்ளி உரிமையாளர் செந்தில்வேல்,தாளாளர் ஆபிரகாம் டேவிட்(36) ஆகியோர் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் போட்டதாக போலி ஆவணம் தயாரித்துள்ளனர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ததாக போலி நம்பர்,சீல்,சார்பதிவாளர் கையெழுத்தும் போட்டுள்ளனர்.இந்த ஆவணங்களை மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பி பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றுள்ளனர். இது குறித்து இடத்தின் உரிமையாளர் சுப்புராமன் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். பள்ளியை நடத்திய செந்திவேல் இறந்து விட்ட நிலையில் இன்ஸ்பெக்டர் பரமசிவம் தலைமையிலான போலீசார் பள்ளி தாளாளர் ஆபிரகாம் டேவிட் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்ட விவகாரம் : 100 பேருக்கு ஜாமீன் மார்ச் 10,2010,21:44 IST
சென்னை : சென்னையில் பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரு கட்சியை சேர்ந்த மொத்தம் 100 பேருக்கு சென்னை அமர்வு கோர்ட் ஜாமீன் வழங்கியது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் திருச்சியில் 2வாரம் தங்கி கையெழுத்திட வேண்டும் என்றும், பா.ம.க.,வினர் வேலூரில் 2 வாரம் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இந்த மோதலை தடுக்க தவறியதற்காக நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் உதவி ஆணையருக்கு மெமொ கொடுக்கவும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்டால் மட்டுமே சஸ்பெண்ட் ரத்து -அரசு : மன்னிப்பு கேட்க மாட்டோம் : எம்.பி.,க்கள் மார்ச் 10,2010,21:11 IST
புதுடில்லி : ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதன் காரணமாக சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த 7 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை ரத்து செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் இது நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், எம்.பி.,க்கள் மன்னிப்பு கோரினால் மட்டுமே சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்று கூறினார். ஆனால் சம்பந்தப்பட்ட எம்.பி.,க்கள் பதவியே பறிபோனாலும் மன்னிப்பு கேட்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்க நகர் டெக்சாசில் காந்தி சிலை மார்ச் 10,2010,20:56 IST
நியூயார்க் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், டல்லஸ் நகரத்தில் காந்தி சிலை நிறுவ நகர நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக, இந்திய அமெரிக்கரான பிரசாத் தோடகுரா தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் நகரில் ஒரு லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்கள், மத்தியில் பல்வேறு சமூகத் தன்னார்வ அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.'இந்திய அமெரிக்க நட்புறவு கவுன்சில்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பிரசாத்துக்கு, டல்லஸ் நகர நிர்வாகம், காந்தி சிலையை நிறுவுவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்துக் கூறுகையில்,'நகர மேயருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நீண்டநாள் கனவு' என்றார்.ஒன்பதடி உயரத்தில் தண்டி யாத்திரையின் போது காந்தி நடந்து செல்லுவது போல உருவ அமைப்பில் சிலை வடிவமைக்கப்படுகிறது. ஆந்திராவின் பிரபல சிலை வடிவமைப்பாளர் பி.வர பிரசாத் இதைத் தயாரிக்கிறார். இதன் ஆரம்பக் கட்டப் பணிகளுக்காக ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரி சட்டசபை 25ம் தேதி கூடுகிறது மார்ச் 10,2010,20:25 IST
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை, வரும் 25ம் தேதி கூடுகிறது.புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 17ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. 18, 19ம் தேதிகளில் கவர்னர் உரை மீதான விவாதம் நடந்தது.விவாதத்துக்கு முதல்வர் வைத்திலிங்கம் பதிலளித்தார். இதையடுத்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது. பின், சபையை காலவரையின்றி சபாநாயகர் ராதாகிருஷ்ணன் ஒத்தி வைத்தார்.புதுச்சேரி சட்டசபை செயலர் சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'புதுச்சேரி சட்டசபை வரும் 25ம் தேதி காலை 11 மணிக்கு சட்டசபை மண்டபத்தில் கூட்டப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் சட்டசபையில், 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் வைத்திலிங்கம் தாக்கல் செய்கிறார்.
இன்ஸ்பெக்டருக்கு எதிரான சாட்சி கோர்ட்டில் இருந்து தப்பி ஓட்டம் மார்ச் 10,2010,19:50 IST
திண்டுக்கல் : போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக சாட்சி சொன்னவர், கையெழுத்து போடாமல் கோர்ட்டில் இருந்து தப்பிச் சென்றார்.சென்னை புதுப்பேட்டை எல்லப்பன் தெருவை சேர்ந்தவர் பஷீர் அகமது (36). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா துணை நடிகை பிந்துவுடன் காரில் திண்டுக்கல் வரும் போது, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் வழிமறித்து சோதனை செய்தார். அப்போது இன்ஸ்பெக்டர், இவர்களை லாட்ஜில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக, பஷீர்அகமது திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.,2 கோர்ட்டில் நடந்து வருகிறது.வழக்கு விசாரணைக்கு பஷீர்அகமது ஆஜர் ஆகாததால் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இந்நிலையில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பஷீர்அகமது காலையில் சாட்சி சொன்னார். பின்னர் ஆவணங்களில் கையெழுத்து போட்டு விட்டு, நீதிபதி அனுமதியுடன் செல்ல வேண்டும். பிற்பகலும் விசாரணை நடப்பதாக இருந்தது.ஆனால் பஷீர் அகமது காலையில் மட்டும் சாட்சி சொல்லி விட்டு, மாலையில் தப்பி விட்டார்.இவரை கைது செய்ய நீதிபதி உமாராணி உத்தரவிட்டார்.
சிறுமிகளை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளிக்கு 7 ஆண்டு சிறை : ஸ்ரீவி.,கோர்ட் உத்தரவு மார்ச் 10,2010,19:34 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., அருகே சிறுமிகளை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளி அய்யப்பன், மற்றும் உடந்தையாக இருந்த அவரது தங்கை வேளாங்கண்ணிக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கொத்தன்குளத்தை சேர்ந்த கூழ்சாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி பேச்சியம்மாள் ஊராட்சி தலைவர். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அதே பகுதியை சேர்ந்த சின்ன தம்பியின் மகள் வேளாங்கண்ணி(40)யும் பேச்சியம்மாளுடன் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. வேளாங்கண்ணியுடன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவரது அண்ணன் அய்யப்பன்(43) வசித்து வந்தார். இந்நிலையில் பேச்சியம்மாளின் 12 வயது பேத்தியையும், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியையும்,ச வேளாங்கண்ணி ஒத்துழைப்புடன் அய்யப்பன் கடத்தி கற்பழித்தார். சில மாதங்களில் இரண்டு சிறுமிகளுக்கும் எய்ட்ஸ் நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. சிறுமிகளிடம் விசாரித்ததில், தங்களை அய்யப்பன் கற்பழித்ததை தெரிவித்தனர். சிறுமிகளின் பெற்றோர் வன்னியம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அய்யப்பன் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இருவருக்கும் தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஸ்ரீவி., தலைமை குற்றவியல் நீதிபதி முருகாம்பாள் தீர்ப்பளித்தார்.
ஆங் சாங் சூகி தேர்தலில் போட்டியிட தடை மார்ச் 10,2010,19:19 IST
யாங்கூன் : மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகி தேர்தலில் போட்டியிட மறைமுகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது, என்ற புதிய சட்ட விதிமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. கடந்த 1990ம் ஆண்டு ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி அமோக வெற்றி பெற்றார். ஆனால், இவரை ஆட்சியில் அமரவிடாமல் ராணுவ அரசு வீட்டு சிறையில் அடைத்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஆங் சாங் சூகி 14 ஆண்டுகள் சிறையில் இருந்து வருகிறார்.யாங் கூன் நகரில் ஏரியின் நடுவே உள்ள வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங் சாங் சூகியை அமெரிக்கர் ஜான் எட்டாவ் கடந்த ஆண்டு ரகசியமாக சந்தித்து பேசினார். பாதுகாப்பை மீறி அமெரிக்கருடன் பேசியதற்காக இருவர் மீதும் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூகிக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நிர்பந்தத்தால் ஜான் எட்டாவ் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.இந்நிலையில், இந்த ஆண்டு மியான்மரில் பொது தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆங் சாங் சூகி போட்டியிடக்கூடாது, என்பதற்காக ராணுவ அரசு அவசரமாக ஒரு சட்டத்தை அறவித்துள்ளது. சிறை தண்டனை பெற்ற எந்த ஒரு நபரும் கட்சியில் இருக்க முடியாது. தேர்தலில் போட்டியிடவும் அனுமதியில்லை, என தெரிவித்துள்ளது.இதன் மூலம் ஆங் சாங் சூகி தனது சொந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் இடைத்தேர்தல் : மனு தாக்கல் முடிந்தது : 37 பேர் மனுதாக்கல் மார்ச் 10,2010,18:42 IST
தர்மபுரி : பென்னாகரம் தொகுதியில் நேற்றுடன் 23 பேர், மனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனு தாக்கல் இன்றுடன் முடிந்தது. கடைசி நாளில் 14 பேர் மனுதாக்கல் செய்தனர். பென்னாகரம் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் கடந்த 3ம் தேதி துவங்கியது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன.தி.மு.க., சார்பில் இன்பசேகரன், அ.தி.மு.க., அன்பழகன், பா.ம.க., தமிழ்குமரன், தே.மு.தி.க., வக்கீல் காவேரிவர்மன் ஆகியோர், மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், தே.மு.தி.க., வேட்பாளரை தவிர மற்ற மூவரும், தலா நான்கு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் வரை, அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் சுயேச்சைகள் உள்ளிட்ட 18 பேர், மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று, தர்மபுரியில், தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரியிடம், கம்மம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன், திப்பம்பட்டி பழனி, அன்பழகன், பந்தாரஹள்ளி முருகேசன் உட்பட ஐந்து பேர், சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். இதனால், மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 23 ஆனது.பென்னாகரம் தாசில்தார் அலுவலகத்தில், நேற்று யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், இன்று, மனு தாக்கல் முடிந்தது. இன்று மட்டும் 13 பேர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து பென்னாகரம் இடைத்தேர்தலில் 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மனு பரிசீலனை நாளையும், வரும் 13ம் தேதி மனு வாபஸ் பெறவும் இறுதி நாள். 13ம் தேதி மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
நித்தியானந்தர் மீது நடவடிக்கை : எடியூரப்பா மார்ச் 10,2010,18:38 IST
பெங்களூரு : நடிகையுடன் சல்லாப சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் அவர் நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்ய மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், அவரது இருப்பிடம் குறித்து மாநில போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
25 சதவீத லாரி வாடகை உயர்வு கேட்டு ஏப்., 5 முதல் ஸ்டிரைக் நடத்த முடிவு மார்ச் 10,2010,18:28 IST
திண்டுக்கல் :பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால், லாரி வாடகை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. லாரி உரிமையாளர்கள் 25 சதவீத உயர்வு கேட்டு ஸ்டிரைக் செய்ய முடிவு செய்துள்ளனர்.பட்ஜெட்டில் டீசல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, டயர் நான்கு சதவீதமும், லாரியில் பயன்படுத்தும் ரப்பர் பொருட்கள், ஆயில் சீல்ஸ் 3 முதல் 8 சதவீதமும் விலை உயர்ந்துள்ளன. இதன் காரணமாக லாரியின் ஒட்டுமொத்த முதலீட்டுச் செலவும்,போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது.நீண்டகாலமாக வாடகை உயர்த்தப்படாத நிலையில், தற்போது 25 சதவீதம் வரை வாடகை உயர்வு வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கேட்கின்றனர்.வியாபாரிகள் 10 சதவீதம் வாடகை உயர்வு கொடுத்துள்ளனர். அதுவும் தமிழகத்திற்குள் இயக்கப்படும் லாரிகளுக்கு மட்டுமே; வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் லாரிகளுக்கு வாடகை உயர்த்தி வழங்கப்படவில்லை. வாடகை உயர்வு கேட்டு வியாபாரிகள் சங்கத்தினருடன், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். உடன்பாடு ஏற்படாவிட்டால், ஏப்., 5ம் தேதி முதல் ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
பென்னாகரம் தொகுதியில் 3 நாள் துணை முதல்வர் பிரச்சாரம் மார்ச் 10,2010,18:14 IST
தர்மபுரி: பென்னாகரம் தொகுதியில் துணை முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பிரச்சாரம் செய்கிறார்.பென்னாகரம் தொகுதியில் தி.மு.க., அமைச்சர்கள் முகாமிட்டு, தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் பென்னாகரம் தொகுதியில் துணை முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். வரும் 23ம் தேதி ஸ்டாலின் தர்மபுரி வருகிறார். அங்கிருந்து பிரச்சாரத்தை துவங்கி மூன்று நாட்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.
புதிய தலைமைசெயலகத்தை பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மார்ச் 10,2010,17:42 IST
சென்னை : சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமை செயலகத்தை வரும் சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழா நடைபெறும் இடத்தை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் நேரிடையாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக அவர்கள் தமிழக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். வெள்ளிக்கிழமை மாலை பாதுகாப்பு அதிகாரிகள் வசம் தலைமை செயலகம் ஓப்படைக்கப்படும் என தெரிகிறது. பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கட்சியில் பிளவு ஏற்படவில்லை : நிதிஷ்குமார் மார்ச் 10,2010,17:16 IST
பாட்னா : பெண்கள் மசோதா குறித்து கட்சியினருக்குள் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை தான் என கூறியுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார், தங்கள் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து பிரிந்து புதுக்கட்சி ஆரம்பிக்கும் திட்டமில்லை என்றும் கூறியுள்ளார்.
உதவி இயக்குனர்களுக்கு ஊதியம் திட்டம் : முதல்வர் தொடங்கி வைத்தார் மார்ச் 10,2010,17:13 IST
சென்னை : டைரக்டர் சங்கம் மூலம் உதவி இயக்குனர்களுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய அணுகுமுறையாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு வழங்கக்கூடிய ஊதியங்களை இயக்குநர்கள் சங்கத்தின் மூலமாக வழங்கிடும் புதிய திட்டம் முதல்வர் கருணாநிதியால் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
நளினி விடுதலை ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு மார்ச் 10,2010,16:34 IST
சென்னை : நளினி விடுதலையை தீர்மானிக்க அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு அறிக்கை அரசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ராஜ்யசபாவிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு : மம்தா பானர்ஜி விருப்பம் மார்ச் 10,2010,14:50 IST
புதுடில்லி : ராஜ்யசபாவிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு அளித்தால் என்ன என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தங்கள் கட்சி பல முறை ராஜ்யசபாவிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். பெண்கள் மசோதா கொள்கைக்கு தங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது என்றார். டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அமெரிக்க என்.ஜி.ஓ., அமைப்பை சேர்ந்த 6 பேர் படுகொலை மார்ச் 10,2010,14:29 IST
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அமெரிக்க என்.ஜி.ஓ., அமைப்பை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் இருக்கும் மன்ஷேராவில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் என்.ஜி.ஓ., அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பின் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள் சிலர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கோயம்பேட்டில் டைல்ஸ் கடையில் கொள்ளை மார்ச் 10,2010,14:15 IST
சென்னை : சென்னை கோயம்பேட்டில் இருக்கும் டைல்ஸ் கடையில் 27 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லோக்சபாவில் தொடர் அமளி : அவை நாள் முழுவதற்கும் ஒத்திவைப்பு மார்ச் 10,2010,14:02 IST
புதுடில்லி : லோக்சபாவில் பெண்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால் அவை 12 மணி , 2 மணி என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை 2 மணிக்கு மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்ததால், நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.
உடுமலையில் லேபர் கான்ட்ராக்டரிடம் இருந்து பணம் கொள்ளை மார்ச் 10,2010,13:47 IST
உடுமலைப்பேட்டை : உடுமலைப்பேட்டையில் வங்கியில் இருந்து 3.5 லட்சம் ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு டூவீலரில் சென்ற கான்ட்ராக்டரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி சாலையில் அவர் சென்ற போது அவரை பின் தொடர்ந்து மாருதி 800 காரில் வந்த மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் அவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாக்., கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு தண்டனை மார்ச் 10,2010,13:14 IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு பாக்., கிரிக்கெட் வாரியம் கடும் தண்டனை அறிவித்துள்ளது. சமீபத்திய ஆஸி.,யுடனான ஆட்டத்தில் தோல்விக்கு காரணமாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்படி விசாரிக்கப்பட்டு முன்னாள் கேப்டன் முகம்மது யூசூப், யூனிஸ்கான் ஆகிய இருவரும் வாழ்நாள் முழுவதும் ஆட முடியாது என தண்டனையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சோஹிப் மாலிக் மற்றும் ராணா நவீத் உல் ஹசன் ஆகியோருக்கு ஒரு வருடத்தக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில வீரர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் துணிக்கடையில் தீ விபத்து: 4 இந்தியர்கள் பலி மார்ச் 10,2010,12:30 IST
கோலாலம்பூர் : மலேசியாவிலுள்ள ஜோஹோர் மாநிலத்தில் தெற்கு பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து எற்பட்டது. இந்த தீ விபத்தில் அக்கடையில் வேலை பார்த்த இந்தியாவை சேர்ந்த 4 ஊழியர்கள் பலியானார்கள். அதில் இறந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
ஊட்டி கோடை விழா தேதிகள் அறிவிப்பு மார்ச் 10,2010,12:26 IST
ஊட்டி : ஊட்டி கோடை விழாவுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலை துறை இயக்குநர் டாக்டர் சந்திரமோகன் தேதிகளை அறிவித்தார். ஊட்டியில் மே 08; 09 தேதிகளில் ரோஜா கண்காட்சி நடைபெறும் எனவும் 14,15,16 தேதிகளில் மலர் கண்காட்சி நடைபெறும் எனவும் தெரிவித்தார். குன்னூரில் 22,23 தேதிகளில் பழ கண்காட்சியும் ; கோத்தகிரியில் 29, 30 தேதிகளில் காய்கறிகள் கண்காட்சியும் நடைபெறவிருக்கிறது. முதல் முறையாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருக்கும் 30 பழமையான மரங்கள் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இது தவிர கூடலூரில் வாசனைப் பொருட்கள் கண்காட்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் எதிரொலி : ராஜ்யசபாவில் சமாஜ்வாடி எம்.பி., க்கள் வெளிநடப்பு மார்ச் 10,2010,12:15 IST
புதுடில்லி : ராஜ்யசபாவில் அத்துமீறி நடந்து கொண்ட சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி.,க்கள் 7 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று அவை கூடியவுடன் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சஜ்ஜன் குமாருக்கு ஜாமீன் கிடைத்தது மார்ச் 10,2010,11:34 IST
புதுடில்லி : 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு டில்லி ஐ கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
பென்னாகரம் இடைத்தேர்தல் 2வது துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு மார்ச் 10,2010,11:25 IST
தர்மபுரி : பென்னாகரம் இடைத்தேர்தல் 2வது துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பென்னாகரம் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பல்வேறு காரணங்களால் விடுபட்டு போன தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி 3000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றை பரிசீலனை செய்து தற்போது 2483 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இறுதி நிலவரப்படி பென்னாகரம் இடைத்தேர்தலில் ஓட்டளிக்க தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து எட்டு ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை : 1 லட்சத்து 2 ஆயிரத்து 892 ; பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 98 ஆயிரத்து 116.